Online Library TheLib.net » சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்
cover of the book சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்

Ebook: சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்

00
15.02.2024
0
0
முன்னுரையிலிருந்து

“சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்” தொடரை தினத்தந்தி இளைஞர் மலரில் எழுதிய அறுபது வாரங்களும் அலாதியானவை ! மேலே சொன்ன நிகழ்வைப் போல இந்தக் காலகட்டத்தில் நடந்த அனுபவங்கள் ஒரு புத்தகம் போடும் அளவுக்கு பெரியது. எஸ்.எம்.எஸ் அனுப்பும் நண்பர்கள், தொலைபேசியில் ஐடியா கேட்கும் ஆசிரியர்கள், நேரில் வந்து தழு தழுக்கும் முகம் தெரியாத நண்பர்கள் என இந்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது.

“ஐ வாஸ் வெரி டிஸ்டர்ப்ட்… அப்போ ரொம்ப தப்பான ஒரு முடிவு எடுக்கிறதா இருந்தேன். உங்க கட்டுரை ஒண்ணைப் படிச்சப்புறம் அந்த முடிவைத் தள்ளி வெச்சுட்டு வாழ்க்கையைத் தொடர்கிறேன்” என உயரதிகாரி ஒருவர் என்னிடம் தனியறையில் உரையாடியபோது அச்சமும், மகிழ்வும் ஒரு சேர என்னிடம் வந்து உட்கார்ந்து கொண்டன.

எழுத்துகளில் எதிர்மறை சிந்தனைகளை விதைக்கக் கூடாது. நேர் சிந்தனைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அப்பா சொன்ன வேதவாக்கு ! எழுத்துகள் சமூகத்தில் யாரையோ ஒருவரை ஏதோ ஒரு விதத்தில் தொடும் எனும் அசாத்திய நம்பிக்கை தான் அதன் காரணம். கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு அதை ரொம்ப ஆழமாகவே உணர்ந்தேன்.

தினத்தந்தி எனக்குச் சொன்னது ஒரே ஒரு விஷயம் தான். “மக்களுக்குப் பயன்படறமாதிரி தன்னம்பிக்கை விஷயங்கள் எழுதுங்க. குறிப்பாக இளைஞர்களுக்கு வழிகாட்டற மாதிரி கட்டுரைகள் இருக்கட்டும்”. அவ்வளவு தான் ! ரத்தினச் சுருக்கமான வரிகள்.

தடுக்கி விழுந்தால் நாலு தன்னம்பிக்கைக் கட்டுரைகள் கிடைக்கின்ற காலகட்டம் இது. அவற்றிலிருந்து அமைப்பிலும், சொல்லும் விதத்திலும் கட்டுரைகளை வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பது மட்டுமே நான் மனதில் நினைத்த விஷயங்கள். இந்தக் கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும் உண்மை நிகழ்வுகளில் பெரும்பாலானவை உங்களுக்குப் புதிதாக இருக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.

வாழ்க்கை பெரும்பாலும் பொருளாதாரத்தின் எடையை வைத்தே அளக்கப்படுகிறது. வேலையிலும், வாழ்க்கையிலும் வெற்றி பெறுவதே உண்மையான வெற்றி. எனவே தான் கட்டுரைகளில் உயர்வுக்கான வழியையும், உணர்வுகளின் வலியையும் கலந்தே பயணிக்க வைத்திருக்கிறேன்.

இந்தக் கட்டுரைகளுக்கான தயாரிப்புகளில் தகவல் தருவதானாலும் சரி, வீட்டு வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டுக் கட்டுரை எழுதையில் ஆதரவு தருவதானாலும் சரி, கட்டுரை வெளியானபின் விமர்சனம் தருவதானாலும் சரி, எனது மனைவியில் அன்பு கூடவே இருந்தது எனது பாக்கியம் ! இரண்டாவது விமர்சனமாய் அவருடைய தாயாரின் ஆதரவும் இருந்தது இரட்டைப் பாக்கியம் !

அம்மா, அப்பாவிடம் மழலை முதல் நான் கற்றுக் கொண்ட மதிப்பீடுகளே என்னைக் கட்டியெழுப்பியிருக்கின்றன. அவைகளே இன்று என் எழுத்துக்களையும் நெறிப்படுத்துகின்றன. எனது கட்டுரைகள் வெளியாகும் எல்லா சனிக்கிழமைகளிலும் தவறாமல் அம்மாவின் குரல் செல்போனில் ஒலிக்கும். “நல்லா இருந்துது மோனே. அப்பா இருந்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாரு….” எனும் அந்த ஒற்றை வரியே அடுத்த கட்டுரைக்காய் என்னைத் தயாராக்கும்.

எனது சகோதரர்களும், சகோதரிகளும் நான் ஊருக்கு அனுப்பும் இன்லென்ட் லெட்டராகவே என் கட்டுரைகளை நேசித்தார்கள். இப்படி ஒரு குடும்பம் வாய்த்தால் சுவரில்லாமல் என்ன, கையில்லாமலேயே சித்திரம் வரையலாம் !

இப்போது தொடர் வெளியாகி சில வருடங்கள் கடந்திருக்கின்றன. இப்போதும் எங்கேனும் சந்திக்கும் நபர்கள், நீங்கள் தானே "சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்" எழுதிய சேவியர் என அன்புடன் கேட்டு வியக்க வைக்கின்றனர். எனது மின்னஞ்சல்களில் சாதி, மத, இன, பால் வேறுபாடின்றி அடிக்கடி இந்த நூல் குறித்த மகிழ்ச்சியை முகம் தெரியாத நண்பர்கள் பகிர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

எழுத்துகளால் ஆய பயன் இது தான். விழிகளால் சந்திக்க முடியாத இதயங்களை மொழியினால் சந்திப்பது பெரும் பாக்கியமே. இந்தத் தொடருக்கும், எனது எழுத்துகளுக்கும், எனது வாழ்க்கைக்கும் எப்போதுமே ஆசீர்வாதங்களை மட்டும் அனுப்பிக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் மீண்டும் ஒருமுறை பணிவுடன் பணிகிறேன்.
---

சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்! - சேவியர்
Download the book சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் for free or read online
Read Download
Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen