Online Library TheLib.net » தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 4 (மொத்தம் 4 தொகுதிகள்)
cover of the book தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 4 (மொத்தம் 4 தொகுதிகள்)

Ebook: தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 4 (மொத்தம் 4 தொகுதிகள்)

00
29.01.2024
0
0
கலைக்களஞ்சிய ஆசிரியரின் முகவுரை:

பாரதிதாசன் பல்கைலைக்கழகத் தமிழிசைக் கலைக்களஞ்சியம்' என இப்பெரும் நூல் பெயர் பெறுகிறது ; த இ களஞ்’ என்பதை இதன் சுருக்கக் குறியீடாகக் கொள்ளலாம். இது நான்கு தொகுதிகளாகப் பகுத்துப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வெளியிடப் 12 ஆண்டுகள் ஆயின (1987-1999); இந்த நான்கு தொகுதிகளில் மொத்தம் 2,232 தலைப்புச் சொல்கள் அடங்கியுள்ளன.

தமிழிசையின் தொன்மையும் ஆழமுடைமையும் நன்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளன; இவையே இதன் சிறப்பியல்புகளுள் தலையாயவை. இந்தியாவின் மொழிகளுள் இயற்றப்பட்டுள்ள இசையியல் கலைக்களஞ்சியங்களுள் இதுவே பெரியது. தமிழகத்தில் முழுமையாகத் தமிழில் வெளிவந்துள்ள தமிழிசைக் கலைக்களஞ்சியங்களுள் இதுவே காலத்தால் முந்தியது; தமிழுக்குரியது; நுண்மாண் இலக்கணச் செய்திகளை விளக்குவது.

இதன் ஒவ்வொரு தொகுதியும் அகன்ற பெரிய (அகல்பெரும்) தொகுதியாகும். இசை நடனம், இசைக் கருவிகள், பாடல் இயற்றியோர் வரலாறுகள், சிறப்பாக மேற்கோள்களின் தொகுப்புகள், ஒப்பீடுகள் பல்வேறு வகை வகையான பண்களின் தோற்றம், வளர்ச்சி, தாளக் கொட்டு முழக்கு முறை முதலியன தொகுதிகளில் நிரம்பி நிற்கின்றன. கொட்டு முழக்கு முறை விளக்கம் சிறப்புக்குரியது; அவற்றை எழுதிக்காட்டும் முறை புதியது.

ஒரு பண்ணிலிருந்து மற்றொரு பண் உண்டாகும் முறைகளைக் கட்டக விளக்கங்கள் மூலம் நான்கு தொகுதிகளிலும் விளக்கி, முடிவுகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. இவற்றால் பண்கள் பற்றிய குழப்பங்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்று சில இசை ஆய்வாளர்கள் - ஆதி அடிப்படைப் பாலையைக் குறிஞ்சி என்றும், சிலர் அரும்பாலை என்றும் தொன்மை நூல்களின் தூயமரபுவழி நோக்காமல் தத்தம் போக்கில் நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளனர். முல்லைப்பண்ணே முதன்மைப்பண் எனபதற்கு ஒப்பில்லா உயர்பெரும் சான்றுகள் உண்டு.

ஆதிமுதற்பாலைக்குரிய சுரங்கள் மாறுபட்டு வேறாக அமைந்துவிட்டால், தமிழகத்தின் பண்கள் யாவுமே கெட்டுவிடும்; நெறி மாறிவிடும்; நிரல் மாறிவிடும்; முறை மாறிவிடும் முதற்கோணல் - முற்றும் கோணல் ஆகிவிடும். சாம கானத்திற்குரிய பண்ணை நிறுவுவதற்குத் தக்க பழம்சான்றுகள் இல்லை. முல்லைப் பெரும்பண்ணை நிறுவ நிறைய பழம்பெரும் சான்றுகள் உண்டு.

மேலும், இன்றைய சட்சம் என்பது பண்டைய இளி எனக் கொண்டுவிட்டாலும் பண்களைத் தெளிவுறக் கண்டுபிடிக்க முடியாமல் குழப்பங்கள் நேரிட்டுக் கெட்டுவிடும். குழப்பம் தரும் இத்தகு குறைபாடுகளைக் களஞ்சியம் நீக்கி நெறிப்படுத்திச் செல்லுகிறது.

கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்ப் பாடமும், நாட்டியம், நாடகம், இசைக் கலைகளும் நடத்தும் ஆசிரியர்கட்கு இக்களஞ்சியம் இன்றியமையாத துணை செய்தல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது; இதனைச் சிறு எடுத்துக்காட்டால் விளக்கலாம்: பொருநர் ஆற்றுப்படையில் வந்துள்ள இசைக்குறிப்புகள், கம்பராமாயணத்தில் வந்துள்ள இசைக்குறிப்புகள், கானல் வரியில் வந்துள்ள இசைக் குறிப்புகள் என்பன போன்ற நல்ல பெரும் தலைப்புக்களில் இசைச் செய்திகள் தொகுத்து நிறைய நெடுகக் காட்டப்பட்டுள்ளன. இசையியல் நிறைந்த பழம்இலக்கியப் பகுதிகளை நன்கு நடத்தத் துணை நல்கும் ஒருபெரும் நூலாகும் இக்களஞ்சியம்
வரலாற்று நிகழ்ச்சிகளின் கடைசிக் காலத்தில் முளைத்துப் பெருகியுள்ள சமசுகிருத இசை இலக்கணங்களையும் நிறையப் பயன்பட்டுவரும் சமசுகிருதக் கலைச்சொற்களையும் இனி வழங்காது விடுத்துத் தொன்மைதொட்டுச் செம்மையுற வளர்ந்து வந்துள்ளவைகளை பயன்படுத்தலாம், கனி இருக்கக் காய் கவர்வது ஏன்?’ பாடத்திட்டம் புதிது அமைக்கலாம்.

எ-டு: முன்னர் குறிஞ்சிப்பண் அல்லது முல்லைப் பெரும்பண் என்பது ஒருவகைப்பண் என்று கூறிச் சென்றன அகராதிகளும், நிகண்டுகளும், பாடநூல்களும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி (Lexicon) இது ஒருவகைப்பண் என்ற முறையில்தான் விளக்கிக் சென்றுள்ளது. ஆனால் இக்களஞ்சியம் இன்று புதுவழிகாட்டுகிறது; ஒவ்வொரு பண்ணும் எவ்வாறு தோன்றியது என்றும், அதன் ஏறுநிரல் இறங்கு நிரற் சுரங்கள் இவை இவை என்றும் விளக்கிக் காட்டியுள்ளது.

எ-டு: படுமலைப்பாலை என்பது குறிஞ்சிப் பெரும்பண். அதற்குரிய இன்றைய ராகம் நடபைரவி. இதற்குரிய சுரங்கள் இவை: இப் பெரும்பண்ணைப் பாடிக் காட்டலாம், அதில் பாடல்உருக்களை அமைக்கலாம்; குறிஞ்சிப் பெரும்பண் என்று - குறிப்பிட்டுப் பாடலாம்; பாடலுக்குத் தலைப்பிடலாம், ஆலாபனை செய்யலாம்;

பல நெடும் நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த பண்கள் எனும் வைரக் கற்கள் இன் றும் கையில் ஒளி விளக்குகள் ஆயின ; பண்ணின் மரபு அறியலாம்; தொன்மை அறியலாம்; இலக்கியத்தை நன்கு விளக்கலாம். தமிழிசை இலக்கணம் மீண்டும் உயிர் பெற பைந்தமிழிசையைப் படைப்போம்; களிப்போம்

களஞ்சியத் தொகுதிகள் வெறும் தொகுப்புக்கள் அல்ல; பல்வேறு ஆராய்ச்சிகள் நிரம்பியுள்ளன.

வி.ப.கா.சுந்தரம்
22-3-1999
Download the book தமிழிசைக் கலைக் களஞ்சியம் - தொகுதி 4 (மொத்தம் 4 தொகுதிகள்) for free or read online
Read Download
Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen