Online Library TheLib.net » 20 ஆண்டுகால பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும் (1949 - 1969)
cover of the book 20 ஆண்டுகால பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும் (1949 - 1969)

Ebook: 20 ஆண்டுகால பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும் (1949 - 1969)

00
29.01.2024
0
0
சிலப்பதிகாரம் 103 பண்களைக் குறிப்பிடுகிறது. எனினும், நம் நாட்டில் ஏற்பட்ட வரலாற்றுக் குழப்பங்களால் நமக்குக் கிடைத்துள்ளவை 23 அல்லது 24 பண்களே ஆகும். மேலும் சிலபண்களின் பெயர், திருவிசைப்பா முதலிய நூல்களிலும், நம்மாழ்வார் திருவாய்மொழியிலும் குறிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் உண்மை வடிவத்தை அறிவது இன்று எளிதாக இருக்கவில்லை. ஒருவேளை இனிமேல் தொடர்ந்து நடக்கும் ஆராய்ச்சிகளில் புதிய உண்மைகள் வெளியாகலாம்.

நமக்குக் கிடைத்துள்ள 23 பண்களையும் ஓதுவாமூர்த்திகள் மரபு வழிப்படி பாடிக் காட்டும்போது, அவை, இக்காலத்தில் இராகங்கள் என்று அழைக்கப்பெறும் இசை வடிவங்களாகவே தெரிய வந்தன. ஆதலால், இந்த உண்மையைக் கொண்டும், கருநாடக சங்கீதம் என்பது, தமிழகத்தில் உருப்பெற்று வளர்ந்த இசையே என்கிற பொதுவான கருத்தைக் கொண்டும் ஆராய்கின்றபோது, ஒரு பெரிய உண்மை நன்கு புலனாயிற்று. அதாவது தமிழகத்தின் வரலாற்று விளைவுகளால் ஆதரவு மங்கிய நிலையில் பண் என்ற பெயர் மங்கிவிட்டபோதிலும், ஆட்சியின் செல்வாக்குப்பெற்று, சமஸ்கிருதத்தில் இத் தமிழிசையை இலக்கண அறுதியிட்டு எழுதி, வேறு பெயர்களையும் கொடுத்திருந்தபோதிலும் முத்தமிழில் ஒன்றான இந்த இசை, ஆதிகாலந்தொட்டே தமிழகத்திலேயே தோன்றி நன்கு மலர்ந்தது என்ற மறுக்கமுடியாத உண்மை நிலை நாட்டப்பெற்றது. இது, பண்ணாராய்ச்சியின் மிக முக்கியமான சாதனை என்று அறுதியிட்டுக் கூறலாம்.
இந்த சமயத்தில், பண் ஆராய்ச்சியின் முன்னோடிகளாக இருந்து நல்ல வழிகாட்டியருளிய தஞ்சை ஆபிரஹாம் பண்டிதர் அவர்களையும், யாழ்நூல் கண்ட பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அவர்களையும் நன்றி உணர்வோடு நினைத்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம். பயன் கருதாது இசையார்வத்தால் தூண்டப்பெற்று அவர்கள், ஒப்பரிய சேவை செய்துள்ளார்கள்.

பலநூற்றாண்டுகளாக மறைந்துகிடந்த உண்மைகளை இருபது ஆண்டுகளில் கண்டறிந்தது, மிகப்பெரிய வெற்றியாகும். இருந்தாலும் நமக்குக் கிடைத்த 23 பண்களிலும் எல்லாவற்றையும் திட்டமாகக் கண்டறிந்துவிட்டதாகக் கூற இயலாது. எடுத்துக்காட்டாக, கொல்லி, கொல்லிக் கௌவாணம், பியந்தை, பியந்தைக் காந்தாரம் ஆகிய நான்கு பண்களும் சிறுசிறு வேற்றுமைகளுடன் நவரோக இராகத்திலேயே பாடப்பட்டு வருவது, அவற்றை மேலும் ஆராய வேண்டும் என்பதை நன்கு தெளிவுபடுத்துகிறது. தக்கராகமும், தக்கேசியும் காம்போதியாகவே இசைக்கப்படுகின்றன. இவைகளெல்லாம் தனித்தனிப் பண்களாகவே இருக்க வேண்டும் என்பதை டாக்டர் மு.வரதராசனார் போன்றவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே, மேலும் குறித்த பண்களை நுட்பமாக ஆராய வேண்டிய பொறுப்பும் உள்ளது.

திருநேரிசை, திருவிருத்தம், திருத்தாண்டகம் ஆகியவை யாப்பு வடிவங்கள் என்ற் ஒரு சாராரும், இசையின் பெயர்களே என்று மற்றொரு சாராரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். திருவிசைப்பாப் பண்கள் என்று வெவ்வேறு பண்கள் குறிக்கப்பட்டிருந்தாலும் பழக்கத்தில் பஞ்சமத்தை ஒட்டி ஆகிரியிலும் பெரும்பாலும் அனந்தபைரவியிலும் அப்பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. சாளரபாணி என்பது என்ன பண் என்றே அறியப்படவில்லை. அதையும் துருவிப் பார்க்க வேண்டும்.

திவ்வியபிரபந்தத்தில் பண்கள் குறிக்கப்பட்டிருப்பினும் பாடும் வழக்கம் வழக்கொழிந்தமையால், அப்பண்களையும் அறிய வழி தெரியவிலை. தேவாரத்தில் சொல்லப்படாத சில பண்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன.

இவற்றையெல்லாம் ஆழ்ந்து பார்த்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். சிலப்பதிகாரமும், பிற சங்க நூல்களும் இந்த ஆராய்சிக்கு உதவி செய்யும் என்று கருதுகிறோம். மறைந்துகிடந்த இப்பொழுது வெளியாகிவரும் கூத்த நூல், பஞ்ச மரபு ஆகிய சங்க நூல்களும் இந்த ஆய்விற்கு உதவியாக இருக்கலாம். சிலப்பதிகாரம், ஒரு பெரிய இசைக் கருவூலம். அதை மேலும் நுணுகி ஆராய்வது பெரும் பயன் தரும்.

பண் ஆராய்ச்சியின்போதே கவுத்துவங்கள், நவசக்தி நடனங்கள் முதலியவ்ற்றையும் கண்டோம். அத்துடன் தாளத்தைப் பற்றிய ஆய்வும், திருப்புகழ் என்பது ஒரு பெரிய தாள சமுத்திரம் எனவும், அதன் நுட்பங்களையெல்லாம் மேலும் ஆராய வேண்டும் எனவும் உணர்ந்தோம்.

பொதுவாகப் பார்க்கும்போது, இந்த 20 ஆண்டுகள் (1949 - 1969) சாதனையைப் பற்றி அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். இந்த ஆரய்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் நல்ல பணியை மேற்கொண்டோம் என்ற மன நிறைவையும், மகிழ்ச்சியையும் திண்ணமாய் அடையலாம். இந்த மன நிறைவும், மகிழ்ச்சியும் இருளில் மறைந்து கிடக்கும் மற்ற உண்மைகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்ற பேரார்வத்தை நமக்கு அளிக்கும் தூண்டுகோலாக அமையும்.

- ம.ப.பெரியசாமித்தூரன்
Download the book 20 ஆண்டுகால பண் ஆராய்ச்சியும் அதன் முடிவுகளின் தொகுப்பும் (1949 - 1969) for free or read online
Read Download
Continue reading on any device:
QR code
Last viewed books
Related books
Comments (0)
reload, if the code cannot be seen